தமிழகத்துக்கு தனி நெல் கொள்முதல் கொள்கை உருவாக்க வேண்டும்; மத்திய வேளாண் மந்திரியிடம் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
தமிழகத்துக்கென தனி நெல் கொள்முதல் கொள்கையை உருவாக்க வேண்டும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரிடம் பி.ஆர்.பாண்டியன் நேரில் வலியுறுத்தினார்.;
மத்திய மந்திரியுடன் சந்திப்பு
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லியில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து, பல்வேறு வேளாண் கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு, உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளை உருவாக்கும்போது வணிகர்கள், சிறுதொழில் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை உள்ளடக்கி உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாய பணிகள் பாதிக்காத வகையில் வேலை நாட்களை பட்டியலிட வேண்டும். வேளாண் உற்பத்திக்கும், இழப்புக்கும் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் இழப்பீடு பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.
தனி கொள்கை
ராபி மற்றும் காரிப் பருவ கொள்முதல் தமிழக பருவ காலத்துக்கு முரணாக உள்ளது. எனவே தமிழகத்துக்கென தனி சிறப்பு கொள்முதல் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
நடப்பாண்டில் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதலை முடக்கிவிட்டனர். இதனால் விவசாயிகள் வீதிகளில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் கொள்முதலை உடனே தொடங்க வேண்டும்.
தேனி, திருச்சி, ஈரோடு மாவட்ட வாழை உற்பத்தி மற்றும் சந்தை செயலாக்க குழுக்கள் உருவாக்கம் குறித்த திட்டமிடலை உடனே தொடங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த கோரிக்கைகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதி அளித்திருப்பதாக பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரதமர் அலுவலகத்தில் மனு
முன்னதாக அவர், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி பசுபதிகுமார் பரசை சந்தித்து, "தமிழகத்தில் மாவட்ட அளவில் வேளாண் செயலாக்க உற்பத்தியாளர் குழு அமைத்து, மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கி சந்தைப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு பரிந்துரை செய்த திருவாரூர், தென்காசி, தர்மபுரி மாவட்டங்களுக்கான 'மினி புட் பார்க்'குகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும்" வலியுறுத்தினார்.
மேலும், இந்த கோரிக்கைகள் குறித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்புகளில் பி.ஆர்.பாண்டியனுடன் வாழை கருப்பையா, சுதா தர்மலிங்கம், ராகுல் ஆகியோர் சென்றனர்.