நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் முதுகுவலிக்காக சிகிச்சைக்கு வந்த பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதுகுவலி என கூறி சிகிச்சைக்கு வந்த பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல் வெளியானது.

Update: 2022-06-04 18:08 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதுகுவலி என கூறி சிகிச்சைக்கு வந்த பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுமி கர்ப்பம்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் முதுகு வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, சிறுமி 5 மாத கர்ப்பிணி என்ற அதிர்ச்சி தகவல் தெரிந்தது. உடனே இதுகுறித்து போலீசாருக்கும், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் இதுபற்றி நாகர்கோவில் சைல்டு லைன் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

மெக்கானிக் உடன் பழக்கம்

போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மெக்கானிக் ஒருவர், அங்குள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது 14 வயது சிறுமியுடன் நட்பாக பழகி உள்ளார். மேலும் அந்த சிறுமியின் பெற்றோரிடமும் வாலிபர் நல்ல முறையில் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் வாலிபரும், சிறுமியும் நெருங்கி பழகியதை பெற்றோரும் கண்டு கொள்ளவில்லை.

பாலியல் பலாத்காரம்

கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியும், வாலிபரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அந்த சிறுமியை உறவினர்கள் அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார் என்ற குட்டு அம்பலமானது. இதனை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைதொடர்ந்து சிறுமி தனக்கு நடத்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார்.

காதல் வலைவீசும் கும்பல்

இதற்கிடையே சிறுமியை பலாத்காரம் செய்த மெக்கானிக், கடந்த ஏப்ரல் மாதம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள 2 கடைகளில் பணம் திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் தெரிய வந்தது.

மேலும் மெக்கானிக் வேலை பார்த்த ஒர்க்‌ஷாப்பின் உாிமையாளர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழியை காதலித்து வந்துள்ளார். சிறுமியும், தோழியும் மாணவிகள். பாதிக்கப்பட்ட சிறுமி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். சிறுமியின் தோழிக்கு மெக்கானிக் உதவியுள்ளார். பிறகு தான் மெக்கானிக்கிற்கும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலில் ஒரு கும்பல் செயல்பட்டு வந்த தகவலும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியிடமும் வாக்குமூலமும் பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்