கள்ளக்குறிச்சியை சுற்றி ரிங் ரோடு அமைக்க வேண்டும்

கள்ளக்குறிச்சியை சுற்றி ரிங் ரோடு அமைக்க வேண்டும் சட்டமன்றத்தில் செந்தில்குமார் கோரிக்கை

Update: 2023-01-14 18:45 GMT

கள்ளக்குறிச்சி 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் பேசும்போது, மாவட்ட தலைநகரமாக உள்ளதால் கள்ளக்குறிச்சிக்கு அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் சாலைகள் குறுகியுள்ளதாலும், கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகர் வழியாக செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை குறைக்கும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி.பழனிசாமி கள்ளக்குறிச்சியை சுற்றி ரிங் ரோடு அமைக்க ஆணையிட்டார். அந்த பணி தொடங்காமல் கிடப்பில் உள்ளது. எனவே ரிங் ரோடு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். கள்ளக்குறிச்சி-துருகம் மெயின் ரோடு, சேலம் மெயின்ரோடு தேசிய நெடுஞ்சாலைதுறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ரிங்ரோடு அமைப்பதற்கு திட்டமதிப்பீடு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ரிங் ரோடு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல் துருகம் மெயின் ரோடு, சேலம் மெயின் ரோடு தேசியநெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பட்டில் உள்ளது. எனவே நான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி நிதின்கட்காரியை சந்திந்து சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்