குரோம்பேட்டையில் சுரங்கப்பாதைக்காக வெட்டப்பட்ட அரச மரத்துக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் சுரங்கப்பாதைக்காக வெட்டப்பட்ட அரச மரத்துக்கு மாலை அணிவித்து பசுமைத்தாயகம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
சென்னையை அடுத்த குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ராதா நகர்-ஜி.எஸ்.டி. சாலையை இணைக்கும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கிருந்த பழமையான அரச மரத்தை வெட்டி அகற்றி விட்டனர்.
குரோம்பேட்டை ரெயில் நிலையத்துக்கு நிழல் தந்த இந்த மரம் வெட்டப்பட்டதற்கு இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில் அரசமரம் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளரான குரோம்பேட்டை கண்ணன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெட்டப்பட்ட அரச மரத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வெட்டப்பட்ட அரச மரத்துக்கு பதிலாக 100 மரக்கன்றுகளை தமிழக அரசு நடவேண்டும். இந்த அரச மரத்தை வேறு இடத்தில் மாற்றி அதற்கு உயிர் அளிக்க வேண்டும் என்று ஏ.கே.மூர்த்தி வலியுறுத்தினார்.