மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி திண்டுக்கல்லில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம் சென்றனர்.

Update: 2023-07-01 21:00 GMT

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கடந்த 50 நாட்களுக்கும் மேல் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனவே மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி, திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலையில் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். புனித வளனார் பேராலய பங்கு தந்தை மரிய இஞ்ஞாசி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர்.

பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் புனித வளனார் பேராலயத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு திருப்பலி நடத்தப்பட்டது. அதையடுத்து கிறிஸ்தவர்கள் சமய நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி பிரார்த்தனையும் செய்தனர். முடிவில் மறை மாவட்ட ஆயர் நிருபர்களிடம் கூறுகையில் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்