மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு

அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2023-10-15 18:49 GMT

ராமேசுவரம்,

மாரத்தான் போட்டி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 பிரிவாக மினி மாரத்தான் ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது. கலாம் நினைவிடத்தில் இருந்து மண்டபம் கடற்கரை பூங்கா வரை 21 கிலோமீட்டர் தூர மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

2-வதாக 5 கிலோமீட்டர் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயமும், 3-வதாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது. 21 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற புதுக்கோட்டையை சேர்ந்த வினோத்குமாருக்கு ரூ.50ஆயிரம் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 2-ம் இடம் பிடித்த வினோத்குமாருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும், ஊட்டியை சேர்ந்த 3-ம் இடம் பிடித்த ரங்கராஜுக்கு ரூ.10ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கி பாராட்டப்பட்டது.

ரூ.50 ஆயிரம் பரிசு

இதே போல் பெண்களுக்கான 21 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த பேராவூரணியை சேர்ந்த சுகன்யாவுக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடித்த மணப்பாறையை சேர்ந்த விஜயா வைஷ்ணவிக்கு ரூ.25 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மனோமணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் 5 கிலோமீட்டர் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்திலும் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்