வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம் கர்ப்பிணிகள் அவதி

சின்னம்மாபேட்டை ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.25 நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இன்றி கர்ப்பிணிகள் அவதியடைகின்றனர்.

Update: 2023-08-26 08:34 GMT

திருவாலங்காடு,

திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக அரிசந்திராபுரம், தொழுதாவூர், சின்னம்மாபேட்டையை சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்தது. இதனால் ஊராட்சி சார்பில் தனியார் இடத்தில் தற்காலிகமாக துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு ஆஸ்பத்திரிக்கு உண்டான போதிய வசதி இல்லாததாலும், பெண்கள் குழந்தைகள் காத்திருக்க முடியாத சூழலும் உள்ளது. அதேபோன்று கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்து கொள்ள இடவசதியும் இல்லாததால் சிரமமாக உள்ளது.

எனவே கர்ப்பிணியர் 5 கி.மீ தூரமுள்ள திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி புதிதாக துணை சுகாதார நிலையம் அமைக்க அரசு சார்பில் கடந்தாண்டு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அதிகாரிகள் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றாததால் பணிகிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ப்பிணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்