இருசக்கர வாகனங்கள் நிற்கும் இடமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
இருசக்கர வாகனங்கள் நிற்கும் இடமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கிராமத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஏழை, எளிய மக்கள் தினந்தோறும் சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளை பெற்று செல்கின்றனர். ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வாங்கும் இடத்தில் இட நெருக்கடி உள்ளது. ஆனால் பஸ் மூலம் வேலைக்கு செல்லும் நபர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை நேரத்தில் வந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். இது ஆரம்ப சுகாதார நிலையமா? அல்லது வாகனங்கள் நிறுத்தும் இடமா? என்று சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் புலம்புகின்றனர். ஒரு சில சமயங்களில் மிக அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள், பொதுமக்கள், முதியோர்கள் உள்பட பலரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.