மின் இணைப்பு வழங்காததால் காட்சி பொருளான மின்கம்பம்

சிக்கல் பகுதியில் மின்கம்பத்தில் இணைப்பு வழங்காததால் அந்த மின்கம்பம் காட்சி பொருளாக உள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-06-30 18:45 GMT

சிக்கல்:

சிக்கல் பகுதியில் மின்கம்பத்தில் இணைப்பு வழங்காததால் அந்த மின்கம்பம் காட்சி பொருளாக உள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த மின்கம்பம்

சிக்கல் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளது. நாகை கோட்டை வாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து சிக்கல், பனைமேடு, குற்றம்பொருத்தானிருப்பு, சங்கமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உயர் அழுத்த மின் கம்பிகள் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது.

சிக்கல் பகுதிக்கு வரும் மின்சாரம் கீழ வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு செல்கிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அச்சத்தில் சென்று வந்தனர்.

3 மாதங்களாகியும்...

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து மின்வாரியத்திடம் புகார் அளித்தனர். அதன் பேரில் மின் வாரியத்தினர் அந்த சேதமடைந்த இரும்பு மின்கம்பத்தின் அருகில் சிமெண்டினாலான புதிய மின் கம்பத்தை கடந்த 3 மாதத்திற்கு முன்பு நட்டனர். மேலும் அந்த இரும்பு மின்கம்பம் கீழே விழாமல் இருப்பதற்காக இரும்பு கம்பியை கொண்டு அருகில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர்.

ஆனால் புதிய மின்கம்பம் அமைத்து 3 மாதங்களாகியும் இதுவரை அந்த மின் கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்காமல் உள்ளது என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த இடத்தை கடந்து தான் குற்றம் பொருத்தானிருப்பு, சங்கமங்கலம், பழையனூர், புலியூர் கிராமங்களுக்கு தினமும் சென்று வரவேண்டும்.

மின்இணைப்பு கொடுக்க வேண்டும்

தற்போது காற்று பலமாக அடித்து வருவதால் எந்த நேரத்திலும் இரும்பு மின் கம்பம் கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படுமோ என அப்பகுதியை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த இருப்பு மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தில் மின்இணைப்பு கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கீழவீதி தேரடி அருகே சிங்காரவேலவர் கோவில் நுழைவாயில் உள்ள பகுதியில் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் நட்டு விட்டு சென்றனர். ஆனால் அப்புறப்படுத்திய பழைய மின் கம்பத்தை அங்கிருந்து தேரடி பகுதியில் போட்டு விட்டு சென்றனர்.

போக்குவரத்து இடையூறு

இதனால் இரவு நேரங்களில் அந்த இடத்தை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே தேரடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கிடக்கும் பழைய மின் கம்பத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்