மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி

கலசபாக்கம் அருகே பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற போது மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2023-02-06 16:34 GMT

கலசபாக்கம் அருகே பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற போது மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்காரர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த களம்பூர் குமாரசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. அவரது மகன் தேவா (வயது 29). இவர், பெரணமல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிக்காக சென்றுவிட்டு நேற்று அதிகாலையில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து களம்பூர் நோக்கி சென்றார்.

கலசபாக்கம் அருகே உள்ள விண்ணுவாம்பட்டு கிராமத்தின் அருகே வந்த போது திடீரென சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், படுகாயம் அடைந்த தேவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த தேவாவுக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்