வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி
சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பனவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவர் அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் சங்கரன்கோவில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் பாலசுப்பிரமணியன் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். சங்கரன்கோவில் அருகே முத்துகிருஷ்ணாபுரம் ஊருக்கு வடபுறம் உள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் ெதரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சின்ன கோவிலாங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாலசுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
விபத்தில் பலியான பாலசுப்பிரமணியனின் மனைவி பெரியதாய். இவரும் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். இவர்களுக்கு 1 மகளும், 1 மகனும் உள்ளனர். சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.