பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
உப்பிலியபுரம் அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.;
உப்பிலியபுரம், செப்.4-
உப்பிலியபுரம் அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவி
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.பாதர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருள், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இந்த தம்பதியின் மகள் வர்ஷினி (வயது 17). இவர் முருங்கப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று காலையில் பெற்றோர் மகள் வர்ஷினியை பள்ளிக்கு செல்ல சொல்லி விட்டு, வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் வீடு திரும்பிய போது, வர்ஷினி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனம் உடைந்த வர்ஷினி பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
தற்கொலை
அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி வயலில் உள்ள கிணற்றில் வர்ஷினியின் செருப்பு மிதந்தது. இதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் தேடினர். சிறிதுநேர தேடலுக்கு பின் வர்ஷினி பிணமாக மீட்கப்பட்டார். பள்ளிக்குசெல்லாததை பெற்றோர் கண்டித்ததால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.