நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா

நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை தீயணைப்பு வீரர்கள் போராடி அகற்றினர்.;

Update: 2023-07-08 18:45 GMT

நாகர்கோவில்:

நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை தீயணைப்பு வீரர்கள் போராடி அகற்றினர்.

நாயின் தலையில் சிக்கிய டப்பா

நாகர்கோவில் அருகே உள்ள தோப்பூர் பகுதியில் சாலையில் தெருநாய் ஒன்று தலையில் பிளாஸ்டிக் டப்பா சிக்கியபடி சுற்றி திரிந்தது. உணவு உண்ண முடியாமல் அங்குமிங்கும் உயிருக்கு போராடியது.

இதனை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை கழற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இதுபற்றி நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உதவி தீயணைப்பு அலுவலர் துரை தலைமையில் வீரர்கள் நேற்று தோப்பூர் பகுதிக்கு விரைந்தனர்.

போராடி அகற்றம்

இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் டப்பா தலையில் சிக்கியவாறு சுற்றித்திரிந்த நாயை பிடித்து, டப்பாவை தலையில் இருந்து கையினாலேயே உருவி முழுவதுமாக அகற்றினர். சுமார் 20 நிமிடம் போராடி அவர்களால் டப்பாவை அகற்ற முடிந்தது. இதிலிருந்து விடுபட்ட நாய், தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி அங்கிருந்து சென்றது.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 3 நாட்களாக பிளாஸ்டிக் டப்பா தலையில் சிக்கியபடி நாய் பரிதவித்ததாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

டப்பாவில் ஏதோ இனிப்பு போன்ற பொருள் இருந்துள்ளது. இதனை எடுப்பதற்காக நாய் தலையை உள்ளே நுழைத்த போது சிக்கியுள்ளது. இதனால் 3 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நாய் பரிதவித்ததாக கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்