சிதம்பரத்தில் மடத்துக்கு சொந்தமான இடத்தைஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 வீடுகளுக்கு 'சீல்'மாற்று இடம் கேட்டு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சிதம்பரத்தில் மடத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 14 வீடுகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அப்போது மாற்று இடம் கேட்டு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-20 18:45 GMT

சிதம்பரம்,

ஆக்கிரமிப்பு வீடுகள்

சிதம்பரம் வேங்கான் தெருவில் குருநமச்சிவாய மடம் மற்றும் திருப்பாற்கடல் மடம் உள்ளது. இந்த மடத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 22 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு வீடுகளால் மடத்தில் உள்ள யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி, குரு நமச்சிவாயர் கோவிலுக்கு செல்வதில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிதம்பரத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் மடத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

வாக்குவாதம்

அதன்அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்களிடம் வீடுகளை விரைவில் காலி செய்யவேண்டும் என்று கூறி காலஅவகாசத்துடன் நோட்டீசு கொடுத்தனர். இதனை எதிர்த்து 8 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனிடையே மீதம் உள்ள 14 வீடுகளை காலி செய்ய கொடுத்த கால அவகாசம் முடிவடைந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் ஆய்வாளர் நரசிங்கபெருமாள், செயல் அலுவலர்கள் சரண்யா, மஞ்சு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று வேங்கான் தெருவுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 வீடுகளை பூட்டி, சீல் வைக்க முயன்றனர். அதற்கு அப்பகுதி பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களுக்கு மாற்று இடம் உடனே வழங்க வேண்டும் என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'சீல்' வைப்பு

அதற்கு அதிகாரிகள் ஒரு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு கண்ணீருடன் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். இதையடுத்து அதிகாரிகள் 14 வீடுகளையும் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்