மாட்டுவண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டும்-போலீஸ் அதிகாரிக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மாட்டுவண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-11-10 19:53 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை பகுதியை சேர்ந்த சுசீந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ரெங்கநாதர் பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல், ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றும் நோக்கில் நடத்தப்படும் காளைகளை உள்ளடக்கிய நிகழ்வாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நாட்கள் மற்றும் மாநில அரசால் அறிவிக்கப்படும் இடங்களில், "மஞ்சுவிரட்டு", ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையின் வரம்பிற்குள் இல்லாததால், மனுதாரர் கோரிய பகுதியில் உரிய நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க இயலாது என தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மனுதாரர் மீண்டும் போலீசாரிடம் மனு அளிக்க வேண்டும். மனுவை, சட்டப்படி பரிசீலனை செய்து பட்டுகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்