உளுந்தூர்பேட்டை அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் நெடுமானூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி ஒன்றை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜி(வயது 62) என்பதும், நெடுமானூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜியை கைது செய்த போலீசார், 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.