மந்தாரக்குப்பம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு
மந்தாரக்குப்பம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த ஊ.மங்கலம் அருகே உள்ள புது தெற்குவெள்ளூர் அம்பேத்கர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவர் என்.எல்.சி.யில் நிரந்தர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் ஆகாஷ் என்ற தமிழ் வளவன் (வயது 21). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
அந்த பெண்ணின் தங்கையுடன் புது தெற்கு வெள்ளூர் 5-வது தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் ஆகாஷ் (20) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினார். பின்னர், அந்த பெண்ணை அவர் காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் தொடர்பாக ரா.ஆகாஷ், பி.ஆகாஷ் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கத்தியால் வெட்டினார்
இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ரா.ஆகாஷ், பி.ஆகாஷ் ஆகியோர் புது இளவரசன் பட்டு மாரியம்மன் கோவில் பின்புறம் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரா.ஆகாஷ் எனது காதலியின் தங்கையிடம், நீ ஏன் பேசுகிறாய் என்று கேட்டார். அதில் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பி. ஆகாஷ், ரா.ஆகாசை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
மது போதையில் தனது வீட்டிற்கு சென்ற அவர் விறகு வெட்டும் கத்தியை எடுத்து தனது முதுகின் பின்புறம் சட்டையில் மறைத்து வைத்துக்கொண்டார்.
தொடர்ந்து ரா.ஆகாஷ் 5-வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காத்திருந்த, பி. ஆகாஷ், ரா.ஆகாசை வழிமறித்து நீ காதலிக்கும் பெண்ணின் தங்கையை நான் காதலித்தால் உனக்கு என்ன பிரச்சினை? என்று கேட்டு அவரை திட்டி தாக்கினார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மார்பில் வெட்டியுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் ரா.ஆகாசை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆயுள்தண்டனை
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.ஆகாசை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 3-ல் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆகாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் ஆஜரானார்.