தலைவாசல்:-
தலைவாசல் தாலுகா தியாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர் தனது மகன் மருதமுத்து என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூர் பெருநிலா கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து (38) என்பவர், ரூ.20 லட்சத்தை வாங்கி சென்று பல மாதங்கள் ஆன நிலையில், வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த ஆறுமுகத்தின் மகன் மருதமுத்து கெங்கவல்லியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கருப்பையாவிடம் பணம் வசூலித்து தருமாறு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டார். மேலும் அவருடன் சேர்ந்து கருப்பையா, இவரின் நண்பர்கள் ராமர், முருகேசன், தமிழ்ச்செல்வன், பாண்டியன், ஆறுமுகம் மகன் மருதமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வேப்பம்பூண்டி பகுதியில் நின்று கொண்டிருந்த செல்லமுத்துவை, கருப்பையா தனது காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தியாகனூர் புதூர் பகுதியில் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் காயமடைந்த அவரை ஆறுமுகத்தின் வீட்டின் அருகில் விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்லமுத்து ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கருப்பையா உள்பட 6 பேர் மீது வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மருதமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.