ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக கூறி பலரிடம் ஆயிரக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

ஆலங்குளம், அம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக கூறி பலரிடம் ஆயிரக்கணக்கில் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-06-23 18:45 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழபரும்பு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 

பெட்டிக்கடைக்காரிடம் மோசடி

சம்பவத்தன்று இவர் ஆலங்குளம் தென்காசி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர், ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கினார்.

ஆனால் பணம் வரவில்லை என்று கூறிய அவர், வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து விட்டு அவரது கார்டை கொண்டு சென்று விட்டார். பின்னர் அந்த கார்டு மூலம் பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் முருகன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரத்தை எடுத்தார்.

கைது

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்மநபரை தேடி வந்தனர். அந்த நபர் பணம் எடுத்த ஏ.டி.எம். மையங்களில் பதிவான காட்சிகளை ஆய்வு ெசய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் மேலப்பாளையம் ராஜாநகர் பகுதியை சேர்ந்த பக்ருதீன் (49) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோன்று அவர் மேலும் பல இடங்களில் ஏ.டி.எம். கார்டுகளை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் ஒருவரிடம் ரூ.28 ஆயிரமும், நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் பெத்தநாடார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து அம்பையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றபோது அவரிடம் ரூ.37 ஆயிரமும் மோசடி செய்து உள்ளார். மேலும் மதுரை ஒத்தக்கடை, திருமங்கலம், பாளையங்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் அவர் மீது இதுபோன்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்து உள்ளது.

14 போலி ஏ.டி.எம். கார்டுகள்

இதையடுத்து பக்ருதீனை ேபாலீசார் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 14 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்