அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பயணி விமானத்தில் திடீர் சாவு

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பயணி, விமானத்தில் திடீரென உயிரிழந்தார்.;

Update: 2023-10-03 08:35 GMT

சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்தவர் சுகிர்தராஜ் (வயது 64). அவருடைய மகன் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். மகனை பார்க்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் சுகிர்தராஜ் அமெரிக்கா சென்றார். மகனுடன் 3 மாதங்கள் தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் பின்னர் துபாய் வழியாக மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தனர். துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு விமானத்தில் மனைவியுடன் சுகிர்தராஜ் பயணித்துகொண்டு இருந்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சுகிர்தராஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். அதை பார்த்து அவருடைய மனைவி கதறி அழுதார். விமானத்தில் பயணித்த டாக்டர்கள், விமான பணிப்பெண்களுடன் சேர்ந்து சுகிர்தராஜிற்கு மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

உடனடியாக விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் விமானம் விரைந்து தரை இறங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். 20 நிமிடங்கள் முன்னதாகவே சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

சென்னையில் விமானம் தரை இறங்கியதும், தயாராக இருந்த விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி பயணி சுகிர்தராஜை பரிசோதித்தனர். ஆனால் நடுவானிலேயே கடுமையான மாரடைப்பால் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சென்னை விமான நிலைய போலீசார், சுகிர்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்