விவசாயிகள் புதிய ரக கரும்புகளை நடவு செய்யலாம்
விவசாயிகள் புதிய ரக கரும்புகளை நடவு செய்யலாம் என மேலாண்மை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
மோகனூர்
மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 532 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. அரவை செய்யப்பட்ட கரும்பிற்கு முழு கிரைய தொகையும், பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. வருகின்ற 2023-24-ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு 7 ஆயிரம் ஏக்கர் நடவு மற்றும் 3,500 ஏக்கர் மறுதாம்பு ஆக மொத்தம் 10 ஆயிரத்து 500 ஏக்கர் கரும்பு ஆலை அங்கத்தினர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 30 ஆயிரம் டன் கரும்பு அறவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பருவ மழையின் காரணமாக தண்ணீர் வசதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், புதிய நடவு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8,500 விதைக்கரணை மானியமாக பெற்றுக் கொள்ளலாம். புதிய மற்றும் உயர் விளைச்சல் ரகங்களான கோ, 86032, கோ 11015, சி.ஓ.சி., 13339, மற்றும் சி.ஓ.வி. 09356, நடவு செய்து அதிக விளைச்சல் பெறுவதுடன், சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தி அதற்கான உரிய ஆதார விலை பெறலாம்.
மேற்கூறிய புதிய ரகங்கள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவிகித மானியத் தொகையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் எந்திர அறுவடைக்கு ஏற்றவாறு நடவு செய்து அதிக லாபம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோட்ட கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்களை அனுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.