மணலிபுதுநகர் அருகே வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க புதிய நீர்த்தேக்கம்; பொதுமக்கள் கோரிக்கை

மணலிபுதுநகர் அருகே கடலில் சென்று வீணாகும் நீரை சேமிக்க புதிய நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-01-23 16:48 IST

உபரிநீர் திறப்பு

கொசஸ்தலை ஆறு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் தொடங்கி பூண்டி நீர்த்தேக்கத்தில் நிரம்புகிறது. பின்னர் இங்கிருந்து புழல், சோழவரம் போன்ற ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் சென்னை வாழ் மக்களுக்காக தேக்கி வைக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கிருஷ்ணா ஆற்றுநீர், பூண்டி நீர்த்தக்கத்திற்கு வந்த பின் புழல், சோழவரம் போன்ற ஏரிகளில் நிரம்பிய நிலையில் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

6 டி.எம்.சி. அளவுக்கு கொசஸ்தலை ஆற்றின் வழியாக வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி தாமரைப்பாக்கம் அணைக்கட்டு திருக்கண்டலம், இருளிப்பட்டி, ஜெகநாதபுரம், வன்னியம்பாக்கம் வழியாக வல்லூர் அணைக்கட்டை வந்தடைகிறது.

இந்த அணைக்கட்டு நிரம்பிய நிலையில் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு பகுதியாக நாப்பாளையம் வந்தடைகிறது. மற்றொரு பக்கம் சுப்பாரட்டிபாளையம், பள்ளிபுரம், வெள்ளிவாயல் வழியாக நாப்பாளையம் வந்தடைந்து. வலது புறம் இடது புறம் பகுதியாக வரும் நீர்வரத்து நாப்பாளையம், மணலிபுதுநகர் இடையே ஒன்றாக இணைந்து இடையஞ்சாவடி, சடையங்குப்பம் போன்ற கிராமங்களின் வழியாக எண்ணூர் முகத்துவாரத்தில் நுழைந்து வங்க கடலில் கலக்கிறது.

558 ஏக்கர் பட்டா நிலமும் 331 ஏக்கர் அரசு நிலமும் பரப்பளவு கொண்ட சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம், சுப்பாரெட்டிபாளையம் காலனி, பள்ளிப்புரம் காலனி போன்ற கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து நான்கு புறமும் தீவு போல் காட்சியளிக்கும்.

நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும்

ஆனால் பொதுமக்கள் இந்த பகுதியில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை உருவாகிறது. வெள்ளம் குறையும்போது சகஜமான நிலை திரும்பும். மேலும் வல்லூர் அணைக்கட்டு பகுதிக்கு மேல் 8 அடி உயரத்திற்கு வெள்ளம் வந்தாலும் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த நிலையில் வல்லூர் அணைக்கட்டு பகுதியில் இருந்தும் சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியை சுற்றியுள்ள கொசஸ்தலை ஆற்றின் நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் 331 ஏக்கர் அளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அரசு கையகப்படுத்தி தற்போதைய இருபுற கரைகளை 20 அடி உயரத்திற்கு அகலப்படுத்தி, நாப்பாளையம், மணலிபுதுநகர் செல்லும் மேம்பாலம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும்.

இந்த நீர்த்தேக்கத்தால் ஒரு டி.எம்.சி. அளவுக்கு மழை வெள்ளத்தை சேமிக்க முடியும். இந்த தண்ணீரை வடசென்னை பகுதி மக்களுக்கு குடிநீராக வழங்கலாம். கொசஸ்தலை ஆற்றங்கரை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத நிலையில் நல்ல சுவையான பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர் கிடைக்க வழி ஏற்படுவதுடன் விவசாயம் பெருகும். ஆகவே கொசஸ்தலை ஆற்றின் பகுதியை சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் அறிவியல் ஆலோசனைகள் ஆய்வு செய்து நாப்பாளையம் மணலி புதுநகர் இடையே தடுப்பணை அமைத்து புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்