புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும்
புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும்
குலமாணிக்கத்தில் சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குலமாணிக்கம் கிராமம்
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. அந்த கட்டிடத்தில் அரிசி, கோதுமை, சீனி, உளுந்து, பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நாளடைவில் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, கான்கீரிட் கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் சேதம் அடைந்தது.
புதிய ரேஷன் கடை கட்டிடம்
கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசல்கள் வழியாக மழை தண்ணீர் உள் பகுதியில் சென்று அங்கு வைக்கப்பட்ட பொருட்களை சேதப்படுத்தியது. இதனால் தொடர்ந்து சேதமடைந்த கட்டிடத்தில் வைத்து ரேஷன் பொருட்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சற்று தூரத்தில் உள்ள சேவை மைய கட்டிடத்தில் வைத்து ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருட்கள் வாங்கி வருவதில் சிரமம்
இதுகுறித்து குலமாணிக்கம் சுகன்யா கூறுகையில், குலமாணிக்கத்தில் ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்ததால் தூரத்தில் உள்ள சேவை மைய கட்டிடத்தில் வைத்து ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் உள்ள இடம் போல, சேவை மைய இடம் இல்லை. இதனால், சவுகரியமாக நின்று பொருட்கள் வாங்க முடியவில்லை. மேலும் சேவை மைய கட்டிடம் சற்று தூரத்தில் உள்ளதால் பெண்கள் சென்று பொருட்களை வாங்கி வருவதிலும் சிரமமாக உள்ளது. எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சமூக விரோதிகளின் கூடாரம்
குலமாணிக்கம் அம்பிகாபதி கூறுகையில், ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. தற்போது அந்த கட்டிடம் தானாக இடிந்து விழுந்து பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு விபரீதம் ஏதேனும் ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும், சேதமடைந்த கட்டிடம் உள்ள இடத்தில் சிறுவர்கள் சென்று விளையாடும் போது விபரீதம் ஏற்படலாம். அதே சமயம் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும், தூரத்தில் உள்ள சேவை மையத்தில் சென்று பொருட்கள் வாங்கி வர மக்கள் சிரமப்படுகிறார்கள். இத்தகைய காரணங்களால் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.