தாமிரபரணியில் இருந்து குடிநீர் வழங்க ரூ.423 கோடியில் புதிய திட்டம்

தாமிரபரணியில் இருந்து குடிநீர் வழங்க ரூ.423 கோடியில் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2023-10-17 19:00 GMT

பணகுடி:

பணகுடி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஏசுதாஸ், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் உமா, துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேசினர். பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து பேசினர். செயல்படாத சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள், மின்மோட்டார்களை உடனடியாக சீர்செய்து, 24 மணி நேரமும் தெரு நல்லிகளில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தெரு நல்லிகள் இல்லாத தெருக்களுக்கு உடனடியாக அவை அமைக்கப்படும். உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.423 கோடியில் குடிநீர் திட்டம்

அனுமதி இல்லாமல் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கியவர்கள் மீதும், வீட்டுக்காரர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணியில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூ.423 கோடியில் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் பணகுடி, நாங்குநேரி, வள்ளியூர் உள்பட 7 பேரூராட்சிகளும், களக்காடு நகராட்சியும் பயன்பெறும். இந்த திட்டப்பணிகள் 15 மாதங்களுக்குள் நிறைவடைந்து, வீடுகளுக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்