பாம்பு கடித்து அலட்சியமாக இருந்த வாலிபர் பலி
அரக்கோணம் அருகே பாம்பு கடித்து அலட்சியமாக இருந்த வாலிபர் பலியானார்.;
அரக்கோணத்தை அடுத்த பாலவாய் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை 11 மணியளவில் அந்த பகுதியில் விறகு வெட்டுவதற்கு சென்றுள்ளார். அப்போது மணிகண்டனை சாரை பாம்பு கடித்துள்ளது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் வாயில் இருந்து நுரை வருவதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.