பல்லவர்கால கொற்றவை சிலை கண்டறியப்பட்டது

திருக்கோவிலூர் அருகே பல்லவர்கால கொற்றவை சிலை கண்டறியப்பட்டது.

Update: 2023-10-16 18:45 GMT

திருக்கோவலூர்

திருக்கோவிலூரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகரம் என்கிற குலதீபமங்கலம் கிராமத்துக்கு கிழக்கே, தென்பெண்ணை ஆற்றங்கரையின் வடகரையில், கிருஷ்ணன் வயலில், துர்க்கை மேடு என்ற இடத்தில், பிடி இருக்கி காளி என்று மக்களால் அழைக்கப்படும் பல்லவர் கால கொற்றவை சிலையை கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர், வரலாற்று ஆய்வாளர் சிங்கார உதியன் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர்கள், விழுப்புரம் வீரராகவன், கலியபெருமாள், பேராசிரியர் ஸ்தனிஸ்தலாஸ், நல்நூலகர் அன்பழகன் ஆகியோர் கண்டறிந்தனர்.

135 செ.மீ உயரமும், 75 செ.மீ அகலமும் கொண்ட கருங்கல் பலகையில் கொற்றவை செதுக்கப்பட்டுள்ளது. இக்கொற்றவை மகிஷன்(எருமை) தலைமீது நான்கு கரங்களுடன் நேராக நிற்கிறாள். பின்னால் ஒரு அழகிய கலைமான் கொற்றவையை திரும்பிப்பார்த்தபடி நிற்பது சிற்பியின் கைத்திறனை அதிசயிக்க தக்கவாறு உள்ளது. 4 கரங்கள் கொண்ட இக்கொற்றவையின் மேல்வலக்கரத்தில் பிரையோக சக்கரமும், மேல் இடதுகையில் சங்கும், கடக முத்திரையில் பிடித்துள்ளாள். பின்வலக்கரம் அபய முத்திரையையும், இடக்கரம் தொடையில் தங்கியவாறு காட்டப்பட்டுள்ளது. தலை அலங்காரம், கரண்ட மகுடத்துடனும், காதுகளில் குழைகளும், கழுத்தை தட்டையான சவடியும் (அட்டிகை), மார்பில் கச்சையும், இடைமுதல் தொடைவரை அரையாடை அழகிய சுங்குகளுடன் அணிந்துள்ளாள். கால்களில் கொலுசு அணிந்து அழகிய உருவ அமைப்புடன் காணப்படுகிறது. கரங்களில் வாகுவளையங்களும், முன்கரங்களில் வளையல்களும் உள்ளது கொற்றவைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இக்கொற்றவை சிலை கி.பி.7-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.

பல்லவர் மற்றும் சோழர்களின் படை வீரர்கள், தளபதிகள் போருக்கு செல்லும்போது வெற்றி வேண்டி கொற்றவையை வழிபட்டுச்செல்வது வழக்கம். போரில் வெற்றி வாகை சூடிய பின் தங்களுடைய படைக்கலங்களை கொற்றவைக்கு முன்வைத்து வழிபாடு செய்து நன்றி செலுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு கொற்றவைதான் இவ்வூரில் உள்ள கொற்றவையாகும். இந்த ஆய்வின்போது, ஆசிரியர்கள், உலகமாதேவி, அல்லி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்