விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சப்-இன்ஸ்பெக்டர் பலி

விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஏட்டு படுகாயம் அடைந்தார்;

Update: 2023-10-12 18:49 GMT


மோட்டார் சைக்கிளில் சென்றனர்

விருதுநகர் சூலக்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் புஷ்பராஜ் (வயது 58). வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கார்த்திக்(38).

இவர்கள் 2 பேரும் நேற்று இரவு 11 மணியளவில் விருதுநகர் புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை புஷ்பராஜ் ஓட்டினார். எம்.ஜி.ஆர். சாலை அருகே வந்தபோது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

சப்-இன்ஸ்பெக்டர் சாவு

இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார். கார்த்திக் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்