கயத்தாறு அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில்டிப்ளமோ என்ஜினீயர் பலி

கயத்தாறு அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டிப்ளமோ என்ஜினீயர் பலியானார்.

Update: 2023-08-09 18:45 GMT

கயத்தாறு:

நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிப்ளமோ என்ஜினீயர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பனிக்கர்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த நாகலாபுரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் பாபநாசம். விவசாயி. இவரது மகன் வெயில்ராஜ் (வயது 23). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு, ஊருக்கு அருகில் உள்ள தனியார் கையுறை தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்காக, ஹெவி லைசென்ஸ் எடுப்பதற்காக கயத்தாறில் இருந்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் சவலாப்பேரி நாற்கரச் சாலையில் கயத்தாறு அருகே டிப்பர் லாரியில் எம்.சாண்டு ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்கு இலுப்பையூரணியை சேர்ந்த முத்தையா மகன் மருதையா(49) சென்று கொண்டிருந்தார். அவர் சவலாப்பேரி நாற்கரச் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீ கடையில் அவர் டீ குடித்து கொண்டிருந்தார்.

லாரி மீது மோதல்

அப்போது அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த வெயில்ராஜ் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலைஓரத்தில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறத்தில் சிக்கிக் கொள்ள, அதிலிருந்து வெயில்ராஜ் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த கோர விபத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் உடைந்து தலைசிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் சிறிது நேரத்தில் துடிதுடித்து பலியானார். இதை அறிந்த அப்பகுதிக்கு ஓடிவந்த பெற்றோரும், உறவினர்களும் அவரது உடலை பார்த்து கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று வெயில்ராஜ் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்