மின்வேலியில் சிக்கி கடமான் பலி

பாச்சலூர் அருகே மின்வேலியில் சிக்கி கடமான் பரிதாபமாக இறந்தது.

Update: 2022-11-21 17:03 GMT

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பாச்சலூர் அருகே உள்ள செம்பிரான்குளம் என்னுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான காபி எஸ்டேட் உள்ளது. இங்கு வனவிலங்குகள் புகாமல் இருக்க சோலார் மூலம் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து கடமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது.

இதுகுறித்து எஸ்டேட் ஊழியர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரும்பள்ளம் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதேபோல் கால்நடை மருத்துவ குழுவினரும் அங்கு வந்தனர். பின்னர் கடமான் மீட்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் பரிசோதனை செய்து அங்கேயே புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது 3 வயதான ஆண் கடமான் ஆகும். நாய்கள் விரட்டியதால், மிரண்டு ஓடி வந்த கடமான் மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். மின்வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்