தெருநாய்கள் துரத்தியதால் 30 அடி பள்ளத்துக்குள் விழுந்த கடமான்

கொடைக்கானலில் தெருநாய்கள் துரத்தியதால், 30 அடி பள்ளத்துக்குள் கடமான் விழுந்தது. அதனை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.

Update: 2023-06-24 14:56 GMT

பள்ளத்தில் விழுந்த கடமான்

கொடைக்கானலில், வனப்பகுதியில் இருந்து நகருக்குள் வனவிலங்குகள் புகுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக கூட்டம், கூட்டமாக காட்டெருமைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வழி தவறிய கடமான் ஒன்று, கொடைக்கானல் நகரின் அருகே உள்ள கோக்கர்ஸ் வால்க் பகுதிக்கு நேற்று வந்தது. இதனைக்கண்ட தெருநாய்கள், கடமானை விரட்டின.

தெரு நாய்களிடம் இருந்து தப்பிக்க நகரின் முக்கிய தெருக்கள் வழியாக கடமான் ஓட்டம் பிடித்தது. ஒரு கட்டத்தில், கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே வந்து, அங்குள்ள 30 அடி பள்ளத்துக்குள் கடமான் விழுந்து தவித்தது.

துள்ளிக்குதித்து ஓட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள் முத்துராமலிங்கம், கிருபாகரன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

பின்னர் பள்ளத்தில் கிடந்த கடமானை, ½ மணி நேரம் போராடி வலையை கட்டி பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். நாய்கள் விரட்டியதில் மானுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வனவிலங்கு ஆர்வலர் ஜனனி தலைமையிலான குழுவினர் கடமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன்பிறகு வனத்துறையினர் தங்களது வாகனத்தில் கடமானை ஏற்றி, செண்பகனூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். அப்போது வனத்துக்குள் கடமான் துள்ளிக்குதித்து ஓடியது. அந்த கடமானுக்கு 4 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக நகர் பகுதிக்குள் வராத கடமான் திடீரென வனத்துறை அலுவலக பகுதிக்கு வந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. எனவே கடமானை பார்ப்பதற்காக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்