காசநோயை கண்டறிய எக்ஸ்ரே பொருத்திய நடமாடும் வாகனம்
குமரி மாவட்டத்தில் காசநோயை கண்டறிய எக்ஸ்ரே பொருத்திய நடமாடும் வாகனத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.;
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் காசநோயை கண்டறிய எக்ஸ்ரே பொருத்திய நடமாடும் வாகனத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
பாராட்டு சான்றிதழ்
குமரி மாவட்ட காசநோய் மையம் சார்பில் காசநோய் தொற்று கண்டறிவது குறித்த எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
1 மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே
தமிழக அரசு 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பில் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனங்களை வழங்கியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் நுண்கதிர் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியானது மின் வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என 2 அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ண தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
50 சதவீதத்துக்கும் மேல் குறைவு
குமரி மாவட்டத்தில் துரிதமாக காசநோய் ஒழிப்பு பணிகள் நடைபெற்றதால் கடந்த 10 ஆண்டுகளில் காசநோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காசநோய் தொற்று 20 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது. இதனை பாராட்டும் விதமாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், தனியார் மருந்தகங்கள் மற்றும் மருந்தக வணிகர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் விதமாக 35 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, துணை இயக்குனர் (காசநோய்) வி.பி.துரை, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, டாக்டர்கள் பிரதீப், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.