ஆபத்தான நிலையில் சாய்ந்து நின்று அச்சுறுத்தி வரும் மின்மாற்றி
திட்டக்குடியில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நின்று அச்சுறுத்தி வரும் மின்மாற்றியை விபரீதம் நிகழ்வதற்கு முன்பு சரிசெய்ய பொதுமக்கள் கோாிக்கை விடுத்து வருகின்றனர்.;
திட்டக்குடி
அரசு கல்லூரி
திட்டக்குடி அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரிக்கு திட்டக்குடி மெயின்ரோட்டில் இருந்து வருவதற்கான சாலை உள்ளது. இதில் கல்லூரி வரையிலும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் மண் சாலையாக உள்ளது.
இந்த சாலை வழியாக மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு சென்று வருவது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலைதான் பிரதானமாக அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பயிர்களை அறுவடை செய்து இந்த சாலை வழியாகத்தான் வாகனங்களில் உள்ளூர், வெளியூர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
மின்மாற்றி
அரைகுறையாக தார் சாலை அமைக்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக மின்மாற்றியும் மற்றும் மின்கம்பங்களும் உள்ளன.
இதில் மின்மாற்றியும், 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மின்மாற்றியின் அருகில் இரும்பு சீட்டுகளால் ஆன கொட்டகை மற்றும் கட்டுமான பொருட்களை வைப்பதற்கான பாதுகாப்பு அறையும் உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
தற்போது மின்கம்பிகளின் பிடியில் தான் சாய்ந்து நிற்கும் மின்மாற்றியும், மின்கம்பங்களும் நிற்பதாக கூறப்படுகிறது. பாரம் தாங்காமலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ மின்மாற்றி சாய்ந்து விழும் பட்சத்தில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்து பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே மாணவ-மாணவிகள், விவசாயிகள் நலன்கருதி சாய்ந்து நிற்கும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
இது குறித்து அவர்கள் கூறும்போது, கல்லூரிக்கும், இப்பகுதி விவசாய நிலங்களுக்கும் செல்லும் பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் மின்மாற்றியும், மின்கம்பங்களும் கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்து பருவமழை தொடங்க இருக்கிறது. புயல், மழையில் மின்மாற்றியும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் உங்கள் பகுதியில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்பட்டால் அதுபற்றி மின்வாரியத்துக்கு உடனடியாக தகவல் தொிவிக்குமாறு மின்சாரத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை இல்லை. எனவே மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி ஆபத்தான நிலையில் நிற்கும் மின்மாற்றி, மின்கம்பங்களை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.