கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மையம் தொடங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.;
சென்னை,
சென்னை பாரிமுனை, தம்புசெட்டித் தெரு சாமுண்டீஸ்வரி அம்மன் அறக்கட்டளை கட்டிடத்தில் கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.31 லட்சத்தில் கட்டப்படவுள்ள பள்ளி நுழைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மற்றும் சென்னை தம்புச்செட்டித் தெருவில் சாமுண்டீஸ்வரி அம்மன் அறக்கட்டளையால் வழங்கப்பட்ட இடத்தில் கந்தக்கோட்டம், முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தம்புசெட்டி தெருவில் சுமார் ரூ.10 கோடியிலான இந்த இடத்தில் காளிகாம்பாள் கோவில் மற்றும் கந்தக்கோட்டம் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திடும் வகையில் மருத்துவ மையம் விரைவில் அமைக்கப்படும். இந்த ஆட்சி பொறுப்பேற்றபின், இதுவரை ரூ.4,874 கோடி மதிப்பீட்டிலான 5,273 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
அண்ணாமலை கூறியிருக்கின்ற புகார்கள் எவை, எவை என்று தெரிந்த பிறகு அதற்கு முழுவதுமாக பதில் சொல்ல தி.மு.க. தயாராக இருக்கிறது. எங்களுக்கு மடியிலே கனமில்லை. அதனால் வழியிலே பயமில்லை. பார்ட்- 2 அல்ல, பார்ட்- 10 வரைக்கும் போனாலும் கூட வருத்தப்படுவதற்கோ, கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. பெட்டியில் என்ன இருந்தது என்பதை அதை கொடுத்தவரிடமும், பெற்றுக் கொண்டவரிடமும்தான் கேட்க வேண்டும்.
அண்ணாமலை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காகவோ, மருத்துவர்களின் ஆலோசனைபடியோ நடை பயணத்தை மேற்கொள்கிறாரோ? தெரியவில்லை. ஆனால் நடை பயணம் மட்டுமல்ல எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் நடை பயணத்துக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிபிரியா, ஏகாம்பரரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், காஞ்சீபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, சென்னை மண்டல இணை ஆணையர் (பொறுப்பு) ஜ.முல்லை, உதவி ஆணையர்கள் எம்.பாஸ்கரன், பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன், கோவில் செயல் அலுவலர்கள் விக்னேஷ், பி.முத்துலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.