மணலூர்பேட்டை அருகேரூ.20 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய வாலிபர்காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

மணலூர்பேட்டை அருகே ரூ.20 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.;

Update: 2023-09-07 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்புசாமி பெருமாள் மகன் மாணிக்கவாசகம் (வயது 45). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி கங்கா. இவர்களுக்கு கிருஷ்ணா என்கிற மகனும், பவானி என்கிற மகளும் உள்ளனர். மாணிக்கவாசகம் தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாய் காசியம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாணிக்கவாசகம் தனது மனைவி கங்காவுடன் அதே ஊரில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றுவிட்டார். அவர்களது மகன், மகள் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டனர். காசியம்மாள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலைக்கு சென்றுவிட்டார்.

நகை, பணம் கொள்ளை

வேலை முடிந்து, மதியம் மாணிக்கவாசகம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளைபோயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவர், மணலூர் பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அரூர் போலீசார் கைது செய்தனர்

அதில், கள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவம் நடந்த தினத்தில் அந்த பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் அழைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில் சந்தேகத்தின் பேரில், ஒருவரை மணலூர் பேட்டை போலீசார் பிடிக்க சென்றனர். ஆனால், அதற்குள் அந்த நபரை, திருவண்ணாமலை மாவட்டம் அரூர் போலீசார், வேறு ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பிடித்து சென்றுவிட்டனர்.

அவரிடம் அரூர் போ லீசார் நடத்திய விசாரணையில், அவர் ஆரணி தாலுகா இரும்பேடு கிராமத்தை சேர்ந்த கொள்ளைமேட்டு தெருவில் வசித்து வரும் பெருமாள் மகன் தினகரன் (36) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அரூர் பகுதியில் 5 பவுன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் மணலூர்பேட்டை அருகே சு.கள்ளிப்பாடி கிராமத்தில் ஒரு வீட்டிலும் தான் கொள்ளையடித்ததாக கூறினார்.

காவலில் எடுத்து விசாரணை

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தினகரனை நீதிமன்ற காவலில் எடுத்து, விசாரணை நடத்த மணலூர்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்பின்னர் தினகரன் திருக்கோவிலூர் பகுதியில் வேறு எங்காவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்