ஐகோர்ட்டு முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு - போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்
சென்னை ஐகோர்ட்டு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னை ஐகோர்ட்டு ஆவின் நுழைவு வாயில் முன்பு நேற்று 12 மணியளவில் 50 வயதுடைய ஒருவர் திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். அங்கு காவல் பணியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், பெண் காவலர்கள் அதிரடியாக செயல்பட்டு, குடிக்க பாட்டில்களில் வைத்திருந்த தண்ணீரை, அந்த நபர் மீது ஊற்றி காப்பாற்றினர். பின்னர், அவரை எஸ்பிளேனடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்றும், சென்னை அடுத்துள்ள கீழ்க்கட்டளையில் சலூன் கடையில் வேலை செய்வதும் தெரியவந்தது.
2014-ம் ஆண்டு அவரது தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு சேலம் கோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக விசாரணை நடைபெறுவதாகவும், இதுகுறித்து முதல்-அமைச்சர் பிரிவில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால், ஐகோர்ட்டு முன்பு தீக்குளிக்க வந்ததாக கூறினார். இதையடுத்து அவரை எச்சரிக்கை செய்த போலீஸ் அதிகாரிகள், அவரிடம் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வேல்முருகன் என்பவர் தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இந்தநிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.