நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்
சிறுநாவலூர் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.;
திருச்சி ,
திருச்சி மாவட்டம், பி.மேட்டூரை அடுத்துள்ள கீரிப்பட்டியிலிருந்து நேற்று இரவு 280 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருநெல்வேலியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான லாரியை சிவா (வயது 26) என்பவர் ஓட்டிச் சென்றார்.
லாரி சிறுநாவலூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையின் இடது புறம் சற்று ஒதுங்கியதாக தெரிகிறது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையின் ஓரத்தில் இறங்கிய லாரி, சேற்றில் வழுக்கிச்சென்று அங்கிருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் வயலில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் சிவா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.