6 மாதமாக பூட்டி கிடக்கும் வாரச்சந்தைபயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?

குமரமங்கலத்தில் 6 மாதங்களாக பூட்டி கிடக்கும் வாரச்சந்தை திடலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-02-25 18:45 GMT

எலச்சிபாளையம்

வாரச்சந்தை

திருச்செங்கோடு அருகே உள்ள 87. கவுண்டம்பாளையம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் இருந்து வருகிறது.

பொதுவாக விசைத்தறி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்று சம்பளம் வழங்கப்படும். எனவே அவர்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கும் வகையில் குமரமங்கலம் நாடார் தெரு மேற்குப்பகுதியில் வாரச்சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த சந்தையில் போக்கம்பாளையம், சக்திநாயக்கன்பாளையம், உஞ்சனை, மண்டகாபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பொருட்களை வாங்கி வந்தனர்.

6 மாதங்களுக்கு முன்பு பூட்டு

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான மழை பெய்ததால், மழைநீர் சந்தை திடலை சூழ்ந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சந்தை திடலை பூட்டி வைத்து உள்ளது. சுமார் 6 மாதங்கள் ஆகியும் இன்னும் சந்தை திடல் திறக்கப்படவில்லை.

இதற்கிடையே தற்போது இந்த வாரச்சந்தை நாமக்கல் - திருச்செங்கோடு பிரதான சாலையில் உள்ள பாண்டீஸ்வரர் கோவில் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம், நூலகம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் நிறுத்துமிடமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் தேசிய சாலையின் அருகாமையில் இருப்பதால், பொதுமக்கள் சாலையை கடக்கும்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே ஏற்கனவே சந்தை இயங்கி வந்த திடலை மேம்படுத்தி மீண்டும் அங்கு சந்தை செயல்பட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அடிக்கடி விபத்து

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுந்தரம் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக இயங்கி வந்த வாரச்சந்தை கடந்த மழை காலத்தில் நீர் தேங்கியதால், வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து அங்கேயே இயங்கி வருகிறது. அப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

இதனால் பாண்டீஸ்வரர் கோவிலுக்கு வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள், ஊராட்சி அலுவலகத்திற்கு வருபவர்கள், நூலகத்திற்கு வருபவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சந்தை திடலை, மணல் பரப்பி உயரப்படுத்தி மழைநீர் தேங்காதவாறு அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொது கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு அட்டை வழங்க வேண்டும்.

கட்டமைப்பு வசதிகள்

கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் மங்கையர்கரசி:-

நான் குமரமங்கலத்தில் 4-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறேன். எங்கள் ஊரில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சந்தை திடலில் ஊற்றுநீர் வந்ததால் பூட்டப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது வரை அங்கேயே இயங்கி வருகிறது.

அங்கு போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பழைய சந்தை திடலில் தண்ணீரை வெளியேற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்யும் அளவிற்கு கட்டமைப்பை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து நெரிசல்

விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரன்:-

தற்போது சந்தை இயங்கி வரும் பகுதி போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகும். எனவே சந்தைக்கு வரும் பெண்கள், தொழிலாளர்கள் சாலையை கடக்கும் போது மிகவும் அச்சத்தோடு வந்து செல்கின்றனர். அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது.

எனவே 6 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்துள்ள வாரச்சந்தை திடலை மேம்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்