நெல்லையில் விட்டு விட்டு பெய்த சாரல் மழை

நெல்லை மாவட்டத்தில் நேற்று விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

Update: 2022-12-28 21:33 GMT

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் நெல்லை மாநகர பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. அதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 118 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. அதே போல் காக்காச்சியில் 50 மில்லி மீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 46 மில்லி மீட்டர் மழையும், நாலுமுக்கு பகுதியில் 42 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலை பகுதியில் 35 மில்லி மீட்டர் மழையும், ராதாபுரத்தில் 33 மில்லி மீட்டர் மழையும், நெல்லையில் 11 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடனா அணை பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும், ராமநதி பகுதியில் 20 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு பகுதியில் 18.6 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் 70 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் நேற்று 71.80 அடியாக உயர்ந்துள்ளது. 77.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 79.25 அடியாக உயர்ந்தது.

குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து இருந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மெயின் அருவியில் நேற்று 3-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. சபரிமலையில் நடை அடைக்கப்பட்டதால் அய்யப்ப பக்தர்கள் நேற்று குற்றாலத்திற்கு வரவில்லை. குறைவான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து விட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்