புதுப்பேட்டை அருகே அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திரளான பக்தர்கள் தரிசனம்

புதுப்பேட்டை அருகே அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-19 18:45 GMT

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே பனப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானக்கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மயானக்கொள்ளை விழா நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு காலை 7 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து மாலை 4 மணிக்கு மயானக்கொள்ளை விழா கோவில் வளாகத்தில் நடந்தது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பலர் அம்மன் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் அம்மன் வேடம் அணிந்திருந்தவர்கள், பொதுமக்களின் மேல் நடந்து சென்றதால், அவர்களின் நோய்கள் தீரும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அதன்படி பொதுமக்கள் பலர் தரையில் படுக்க, அவர்கள் மீது அம்மன் வேடம் அணிந்திருந்தவர்கள் நடந்து சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்