முளைப்பாரி கரைக்கும் தொட்டிக்குள் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தொழிலாளி பலி

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் முளைப்பாரி கரைக்கும் தொட்டிக்குள் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தொழிலாளி உயிரிழந்தார். மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினரும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-10 19:00 GMT

முளைப்பாரி கரைக்கும் தொட்டி

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் கோட்டைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து பல கோவில்களுக்கு தீர்த்தம் எடுத்து செல்கின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விநாயகர் சிலை, முளைப்பாரி ஆகியவை அந்த குளத்தில் கரைத்தனர். ஒருசிலர் வீட்டில் பூஜை செய்த பொருட்களையும் குளத்தில் வீசினர்.

இதனால் கோட்டைக்குளம் மாசடைந்து குப்பை, கூழமாக மாறியது. இதையடுத்து குளம் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றப்பட்டது. மேலும் யாரும் உள்ளே செல்லாத வகையில் குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. அதேநேரம் விநாயகர் சிலை, முளைப்பாரி கரைக்க குளத்தின் முன்பு பெரிய தொட்டி கட்டப்பட்டது.

வெல்டிங் தொழிலாளி

இந்த தொட்டியில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதேபோல் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய முளைப்பாரியை பக்தர்கள் கரைத்து வருகின்றனர். மேலும் வீடுகளில் பயன்படுத்திய பூஜை பொருட்களும் வீசப்படுகின்றன. இதனால் தொட்டியில் சுமார் 6 அடி ஆழத்துக்கு கழிவுகள் சேர்ந்து காணப்பட்டன.

திண்டுக்கல் பாறைமேடு சிதம்பரனார்தெரு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 35). வெல்டிங் தொழிலாளி. இவர் விபத்தில் இடது கையை இழந்தவர். இவர் நேற்று தனது மனைவி முத்துமாரி (30), மகன் லிங்கேஸ்வரன் (8) ஆகியோருடன் கோட்டைக்குளம் பகுதிக்கு சென்றார்.

தொட்டியில் சிறுவன் விழுந்தான்

அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கோட்டைகுளம் நிரம்பி காணப்பட்டது. அதை வெற்றிவேல் குடும்பத்தினர் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது முளைப்பாரி கரைக்கும் தொட்டி அருகே சென்ற லிங்கேஸ்வரன் தடுமாறி தொட்டிக்குள் விழுந்தான். அதை பார்த்த வெற்றிவேல், மகனை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்தார்.

ஆனால் முளைப்பாரி தொட்டிக்குள் 6 அடி ஆழத்துக்கு தண்ணீரும், கழிவுகளும் சேர்ந்து கிடந்ததால் லிங்கேஸ்வரனை மீட்க முடியாமல் வெற்றிவேல் தவித்தார். ஒரு கையால் மகனை பிடித்து கொண்டு மேலே வரமுடியாமல் திணறினார். அதை பார்த்த முத்துமாரி, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுடன் 2 பேரையும் மீட்க முயன்றார்.

ஆனால் 2 பேரையும் மீட்க முடியவில்லை. இதனால் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மேலும் கயிறு மற்றும் மீட்பு சாதனங்களுடன் தொட்டிக்குள் இறங்கி சிறுவன் லிங்கேஸ்வரனை மீட்டனர்.

அடுத்தடுத்து மயங்கினர்

அதன்பின்னர் மகனை மீட்க போராடிய வெற்றிவேலை தீயணைப்பு வீரர்கள் மீட்க முயன்றனர். ஆனால் கழிவுகள் நிரம்பிய தொட்டிக்குள் ஆட்கள் இறங்கியதால் திடீரென்று விஷவாயு வெளியேறியது. அந்த விஷவாயு தாக்கியதில் வெற்றிவேல் மயங்கி, தொட்டிக்குள் மூழ்க தொடங்கினார்.

அதை தொடர்ந்து அவரை மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்களான கார்த்திகேயன் (35), சுரேஷ் (38), ராஜ்குமார் (35) ஆகியோரும் அடுத்தடுத்து மயங்கி அதே தொட்டிக்குள் விழுந்தனர். இதனால் மற்ற தீயணைப்பு வீரர்கள் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

தொழிலாளி பலி

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வெற்றிவேல் மற்றும் 3 தீயணைப்பு வீரர்களை அடுத்தடுத்து வெளியே மீட்டு வந்தனர். ஆனால் விஷவாயு தாக்கியதோடு கழிவுகளுக்குள் மூழ்கியதால் வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தீயணைப்பு வீரர்கள் 3 பேரும் மயக்க நிலையில் இருந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவன் லிங்கேஸ்வரன் மற்றும் 3 தீயணைப்பு வீரர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் 3 தீயணைப்பு வீரர்களும், குழந்தைகள் வார்டில் லிங்கேஸ்வரனும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உயிரிழந்த வெற்றிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. அவருடைய உடலை பார்த்து மனைவி முத்துமாரி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் பற்றி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட தீயணைப்பு அதிகாரி வெங்கட்ராமன், மேயர் இளமதி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் லிங்கேஸ்வரன், தீயணைப்பு வீரர்கள் கார்த்திகேயன், சுரேஷ், ராஜ்குமார் ஆகியோரை பார்த்தனர். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களை அறிவுறுத்தினர்.

மகனை காப்பாற்ற முயன்ற தொழிலாளி விஷவாயு தாக்கி இறந்ததோடு, தீயணைப்பு வீரர்கள் மயங்கி விழுந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-


Tags:    

மேலும் செய்திகள்