விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகள் கொள்ளை

Update:2023-02-15 01:00 IST

குமாரபாளையம்:-

குமாரபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் கதவை உடைத்து மர்மநபர்கள், ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

விசைத்தறி உரிமையாளர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பைபாஸ் ரோடு கொங்குநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது45), விசைத்தறி உரிமையாளர். இவர், துணிகளை வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வெப்படை அருகே மோடமங்கலத்தில் மணிகண்டனின் தாத்தா இறந்துள்ளார்.

இதனால் மணிகண்டன், தன்னுடைய குழந்தைகள் 2 பேரையும் கொங்குநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு மோடமங்கலத்துக்கு சென்று இருந்தார்.

அதிர்ச்சி தகவல்

நேற்று காலையில் மணிகண்டனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மணிகண்டனுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்தனர். இதை கேட்டவுடன் மணிகண்டன் பதறியடித்துக் கொண்டு மனைவியுடன் குமாரபாளையம் வந்தார்.

அங்கு வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்ற மணிகண்டனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பீரோ கம்பியால் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தன.

ஒரு கிலோ நகைகள்

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருப்பதாக போலீசாரிடம் மணிகண்டன் கூறியதாக தெரிகிறது.

பரபரப்பு

கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீடுகளில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அது அங்கிருந்து சில தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிமாநில கொள்ளையர்களா?

மணிகண்டன் வீடு சேலம்- கோவை பைபாஸ் சாலை அருகில் ஒருசில வீடுகள் மட்டுமே உள்ள பகுதியில் அமைந்துள்ளது. எனவே மணிகண்டன் வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது வெளிமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனாலும் மணிகண்டன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்டே இந்த கொள்ளை நடந்து இருப்பதால் உள்ளூர்நபர்களுக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த காலங்களில் குமாரபாளையம் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதுவும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதில் கில்லாடியாக இருக்கும் நபர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்