குளத்தை தூர்வார வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்; 138 பேர் கைது
வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தை தூர்வார வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 138 பேரை போலீசார் கைது செய்தனர்.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தை போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு விஜயநாராயணம் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தலைமையில் கடந்த 1-ந்தேதி சென்னை கோட்டை நோக்கி பாதயாத்திரை செல்வதற்காக புறப்பட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்கள், போலீஸ் நிலையம் அருகிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 10-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆதரவாக நேற்று காலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும், அப்பகுதி மக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் நாககுமாரி (வடக்கு விஜயநாராயணம்), ஆதாம் அலி (ஏர்வாடி) மற்றும் போலீசார், நேற்று அதிகாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தொடர்ந்து வடக்கு விஜயநாராயணத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற வடக்கு விஜயநாராயணம் பஞ்சாயத்து தலைவர் மாணிக்கத்தாய் சங்கர் உள்பட 138 பேரை கைது செய்து சிவன்கோவில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த முருகனை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர், முருகனுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். தொடர்ந்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.