நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது

கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் கோட்டைப்பட்டினத்தில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதில் கார் ஒன்று சேதமடைந்தது.;

Update: 2022-07-27 18:41 GMT

கோட்டைப்பட்டினம்:

ஆலமரம் சாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம், கடலோர பகுதிகளான மீமிசல், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வயல் வரப்புகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதில் ஆலமரத்தின் அடியில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது மரம் விழுந்தது.

பள்ளியை சூழ்ந்த மழைநீர்

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார் மீது விழுந்த ஆலமரத்தை அப்புறப்படுத்தி காரை வெளியே எடுத்தனர். இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. மழைநீர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை சூழ்ந்து கொண்டது.

இதனால் மாணவிகள் உள்ளே செல்ல மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை ஊராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்