குழித்துறை ரெயில் நிலையம் அருகேபுதருக்குள் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புக்கூடு
குழித்துறை ரெயில் நிலையம் அருகே புதருக்குள் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புக்கூடு போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.;
குழித்துறை:
குழித்துறை ரெயில் நிலையம் அருகே புதருக்குள் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புக்கூடு போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மனித மண்டை ஓடு
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதைக்கான பணிகள் நடந்து வருகிறது. அதன்படி குழித்துறை ரெயில் நிலையம் பகுதியிலும் அதற்கான பணி தீவிரமாக நடந்தது.
நேற்று காலையில் அங்கு புதர்கள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கொன்றை மரத்தின் அடிப்பகுதியை சூழ்ந்திருந்த புதர்களை ஊழியர்கள் அகற்றிய போது மனித மண்டை ஓடு மற்றும் தொடை எலும்புகள் கிடந்தன. இதனை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொன்று புதரில் வீச்சு?
இதுகுறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நாகர்கோவில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, குமாரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகளை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவற்றை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யாரேனும் கொலை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி இதுவரை கண்டுபிடிக்க முடியாத நபர்களின் விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மாயமானவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட உள்ளது.
மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறை ரெயில் நிலையம் அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.