கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மனித மண்டை ஒடு, எலும்புகளால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளால் பரபரப்பு நிலவியது.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகையில் பெரியார் நகர் குடியிருப்பு ஒட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள புதரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு புதிய கோணிப்பை வீசப்பட்டிருந்தது. நேற்று இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் முனியாண்டி (43) கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். புதரில் வீசப்பட்ட சந்தேகத்திற்கு இடமான அந்த கோணிப்பையை பிரித்து பார்த்தபோது, அதில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் என கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேற்கண்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் அடங்கிய அந்த கோணிப்பையை போலீசார் அங்கிருந்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். தகவல் அறிந்தவுடன் அங்கு 50- க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
ஆள்நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் வந்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பிசியோதரபி படிப்பின்போது வாங்கி வைத்திருந்த மனித மண்டை ஓடு, மற்றும் எலும்புகளை அவரது தாயார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதரில் வீசியது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.