விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கும் சுகாதார பூங்கா
திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கும் சுகாதார பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.;
கலெக்டர் அலுவலக வளாகம்
திருவாரூரை அடுத்த விளமலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கொரடாச்சேரி, குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் தங்களின் அடிப்படைத்தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கும், அரசின் நல திட்ட உதவிகள், சேவைகளை பெறுவதற்கும் வந்து செல்கின்றனர்.மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையம், மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், ஆதார் சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும்.
கோரிக்கை மனுக்கள்
இது தவிர ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் நேரடியாக கோரிக்கை மனுக்கள் வழங்குவதற்காக வந்து செல்கின்றனர்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் முழு சுகாதார இயக்கத்தின் கீழ் கடந்த 2005-ம் ஆண்டு பொதுமக்களின் வசதிக்காக பொது சுகாதார பூங்காவை அப்போதைய மாவட்ட கலெக்டர் ஏகாம்பரம் திறந்து வைத்தார்.
புதர்மண்டி காட்சி அளிக்கும் பூங்கா
இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பூங்கா பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. உரிய பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. சுகாதாரபூங்காவின் சுவர்கள் சேதமடைந்து உள்ளது. அதில் உள்ள கழிவறைகளில் மணல் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பூங்கா விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
சீரமைத்து தர வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுகாதார பூங்கா திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு கழிவறை பயன்படுத்துவற்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துவது என்பது குறைந்து காணப்பட்டது. பல ஆண்டுகளாக சுகாதாரபூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுவதால், பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த பூங்கா செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாக உள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், மரங்கள், வாகனங்கள் மறைவிடங்களை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. எனவே சுகாதார பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்றனர்.