ராஜராஜசோழன் சிலைக்கு மரியாதை செலுத்த அதிகரித்து வரும் அமைப்புகள்

சதயவிழாவையொட்டி ராஜராஜசோழன் சிலைக்கு மரியாதை செலுத்த அதிகரித்து வரும் அமைப்புகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.;

Update:2023-10-26 01:52 IST

சதயவிழா

மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1,038-வது சதய விழா கடந்த 2 நாட்கள் தஞ்சை பெரியகோவிலில் நடந்தது.

2-வது நாளான நேற்று தஞ்சை பெரியகோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பிறகு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சாதி அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் ராஜராஜசோழனை சாதி அடையாளப்படுத்தி ஒவ்வொரு அமைப்பினரும் கோஷங்கள் எழுப்புகின்றனர். கடந்த ஆண்டு 76 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 107 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர். ஆண்டுதோறும் அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

மோதல்

நேற்று தஞ்சை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு அமைப்பினரும் பல இடங்களில் இருந்து ஊர்வலமாக வந்ததால் தஞ்சை காந்திஜிசாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மாலை போட வருபவர்கள் கோஷங்கள் எழுப்பியதுடன், வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தஞ்சை ரெயிலடியில் இருந்து ஊர்வலமாக சென்ற ஒரு அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் தஞ்சை காந்திஜிசாலையில் உள்ள புதுஆற்றுப்பாலம் அருகே வந்தபோது திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரையொருவர் கைகளாலும், கம்புகளாலும் தாக்கி கொண்டனர். இந்த பிரச்சினை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சதயவிழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளி வாலிபருக்கு அனுமதி மறுப்பு

ராஜராஜசோழன் சிலைக்கு நேற்றுகாலை மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் மாலை அணிவிப்பதற்காக வந்தார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் அனைத்து அமைப்பினரும் மாலை அணிவித்த பிறகு மாலையில் வந்து ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலானது. இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை அழைத்து வர முயற்சி செய்தார்.

இந்தநிலையில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை அழைத்து வந்து ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தார். போலீசாரும் அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை ஊக்குவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்