பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் பயங்கரம்: நடுரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை
பட்டப்பகலில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி செட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது51). இவருடைய மனைவி சங்கீதா(42). இவர்களுக்கு ஹரிணிஸ்ரீ (13) என்ற மகளும், சபரிஸ்ரீ (8) என்ற மகனும் உள்ளனர்.
கமுதி அருகே கே.பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக கண்ணன் பணிபுரிந்து வந்தார். கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
எனவே கண்ணன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து கே.பாப்பாங்குளத்தில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
கே.பாப்பாங்குளம் விலக்கு சாலையில் சென்றபோது, திடீரென 4 பேர் கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரித்து தப்ப முயன்றார். ஆனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஓடிவந்து அவரை சுற்றி வளைத்து கழுத்தில் வெட்டினார்கள்.
இதில் சாலையோர பள்ளத்தில் விழுந்த கண்ணன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடுரோட்டில் நடந்த இந்த படுகொலை, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கே.வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்து அரியப்பன்(35), இவருடைய தம்பி முருகன்(30), முத்தலாங்குளம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(25), இலந்தைகுளத்தை சேர்ந்த பாலமுருகன்(22) ஆகியோர் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தீவிர தேடுதல் வேட்டையில் போலீசாரிடம் பாலமுருகன் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், மற்ற 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:-
அரசு பள்ளியில் ஆசிரியராக கண்ணன் பணியாற்றி வந்தாலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஆர்வம் காட்டி உள்ளார். சொத்துக்களை வாங்கி விற்றதில், அவருக்கும் வேறு சிலருக்கும் முன்விேராதம் இருந்துள்ளது. மேலும் பணம், கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினை இருந்துள்ளதாக தெரிகிறது. எனவே அதனால் ஏற்பட்ட தகராறில் இந்த படுகொலை நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இந்த கொலைக்கு வேறு பின்னணி எதுவும் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.