கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்ற அரசு பஸ்

ஏலகிரிமலை கொண்டை ஊசி வளைவில் அரசு பஸ் பழுதாகி நின்றது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அசம்பாவிதமின்றி தப்பினர்.

Update: 2023-04-03 11:58 GMT

பழுதாகி நின்றது

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலைக்கு திருப்பத்தூரில் இருந்து அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ஏலகிரி மலை நிலாவூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.

ஏலகிரி மலையில் இருந்து இறங்கும் முதல் கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ் பழுதாகி வளைவிலேயே நின்றது. இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் அலறியடித்து கொண்டு கிழே இறங்கினர்.

புதிய பஸ் இயக்க வேண்டும்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. இதனால் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து மெக்கானிக் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி பழுதை சரிசெய்தனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் ஏலகிரி மலைக்கு பழைய பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி பஸ்கள் பழுதாகி பாதி வழியில் நின்று விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பள்ளியில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுவதால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்