ரூ.1,500-க்கு போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்ற கும்பல் அதிரடி கைது
சென்னையில் ரூ.1,500-க்கு போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்ற கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
சென்னை வருவாய் புலனாய்வு பிரிவு தென்மண்டல உதவி இயக்குனர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் (வயது 54) என்பவர் போலியான பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை தயாரித்து விற்று வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சரஸ்வதி, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் உரிய வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
3 பேர் கைது
விசாரணையில் முகமது ஷேக் இலியாஸ் தலைமையில் பெரிய மோசடி கும்பல் செயல்படுவது தெரிய வந்தது. முதலில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் (43), ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புகாரி (42) ஆகியோரும் கைதானார்கள்.
அவர்கள் போலி பாஸ்போர்ட், விசா தயாரிக்க தனி அலுவலகம் நடத்தி வந்தனர். அங்கு சோதனை நடத்தி ஏராளமான போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களையும், அவற்றை தயாரிக்க பயன்படும் கம்ப்யூட்டர், ரப்பர் ஸ்டாம்புகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 3 பேரும் 10-வது வகுப்பு படிப்பை தாண்டாதவர்கள். ஆனால் போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பதற்கான அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் கையாள தெரிந்தவர்கள். கடந்த ஒரு வருடமாக இந்த போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு தொழிலை செய்து வந்தனர்.
ரூ.1,500-க்கு விற்பனை
புகார்களில் சிக்கியவர்களின் ரத்து செய்யப்பட்ட பழைய பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை போலியாக புதிதாக தயாரித்து ரூ.1,500-க்கு விற்பனை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். கடந்த ஒரு ஆண்டாக இந்த தொழிலை தொடங்கி, நடத்தினாலும், சமீபத்தில்தான் நாலைந்து பேருக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை விற்றோம். அதற்குள் மாட்டிக்கொண்டோம் என்று இவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களில் சிவகுமார் மீது மட்டும் சி.பி.ஐ. போலீசில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற இருவர் மீதும் வழக்குகள் ஏதும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.